தேவேந்திரர்.இன்

தேவேந்திரர்.இன் உலக தேவேந்திரர்கள் அனைவரும் ஒன்று கூடும் ஒரு நிறைவான இணையதளம்.

தேவேந்திர குலத்தில் இருக்கிற பல்வேறு அமைப்புகளின் செய்திகளையும், கோரிக்கைகளையும், போராட்டங்களையும் உடனுக்குடன் வெளிக் கொணருகிற ஒரு இணையத்தளமாக தேவேந்திரர்.இன் செயல்படும். இச் செய்திகளை அந்தந்த அமைப்புகளின் அனுமதியோடு வெளியிடுவது, அல்லது அவர்களே நேரடியாக தகவல் உள்ளீடு செய்வது என்ற இரு வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல தேவேந்திரர் அமைப்புகள் பல்வேறு தளங்களில் பல்வேறு வகையில் பல சீரிய பணிகளை இந்த மக்களுக்காக செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய இந்த செயல் ஊடகங்களில் மறைக்கப்படுகிறது, அல்லது உண்மை மறைக்கப்பட்டு பொய்யான செய்திகள் வெளிவருகின்றன. அமைப்புகள் தாங்கள் நடத்தும் இதழ்களின் மூலமாக செய்திகளை வெளிக்கொண்டு வர ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ ஆகிறது. பல அமைப்புகளின் செயற்பாடுகள் வெளிவராமலே போய்விடுகின்றன. இன்னும் சொல்வதென்றால் எத்தனை அமைப்புகள் எங்கெங்கு இருக்கின்றன என்று கூட பல பேருக்கு தெரியாது. இப்படி எத்தனையோ தனித் தனியாக செயல்படும் சிறு அமைப்புகள், வட்டார அமைப்புகள், மாவட்ட அமைப்புகள், மாநில அமைப்புகள், தேசிய அமைப்புகள், உலக தேவேந்திர அமைப்புகளின் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரே இணையதளத்தில் அனைத்து தேவேந்திர சொந்தங்களுக்கும் தெரிய வைக்கின்ற முயற்சியை தேவேந்திரர்.இன் செய்கிறது. செய்திகள் உடனுக்குடன் வெளியாவதுடன் உலகம் முழுவதும் காண முடியும்.

இதில் தங்கள் செய்திகளை உள்ளீடு செய்ய எந்த கட்டணமும் கிடையாது. எவ்வளவு செய்திகள் வேண்டுமானாலும் உள்ளீடு செய்யலாம். ஒவ்வொரு அமைப்புக்கும் தனித்தனி Username, Password வழங்கப்படும். தமிழ்நாட்டில் பல ஊர்களில் உள்ள தேவேந்திரர்களின், ஊர் சங்கங்களின் செய்திகளையும் இதில் உள்ளீடு செய்யலாம். அந்த ஊர் பெயரிலேயே Username இருக்கும். தேவேந்திர சொந்தங்கள் அவர்கள் ஊரில் தேவேந்திரர்கள் சேர்ந்து கொண்டாடக்கூடிய கோயில் திருவிழா, மன்ற கொண்டாட்டங்கள், ஆண்டு விழாக்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் பல நிகழ்வுகளை இத்தளத்தில் வெளியிடலாம்.

இவ்விணையதளத்தை மேலும் பயனுள்ளதாக்க தங்களின் மேலான ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

Posted in Uncategorized | 1 Comment

2 தொகுதிகளில் ஜான் பாண்டியன் போட்டி

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் முதுகுளத்தூர், நிலக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஜான்பாண்டியன் பாளையங்கோட்டையில் நேற்று மாலை கூறியதாவது:-

இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், சமூக சமத்துவ பறை, வாணிப செட்டியார் பேரவை, வ.உ.சி. பேரவை, அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு ஆகிய 6 கட்சிகள் இணைந்து இந்திய ஜனநாயக முன்னணி என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கூட்டணிக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டணி வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக முன்னணி கூட்டணியில், எங்கள் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

நாங்கள் 8 பொதுத்தொகுதிகளிலும், 8 தனித்தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். பொதுத்தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் முடிவு அமையும். முதுகுளத்தூர் (பொதுத்தொகுதி), நிலக்கோட்டை (தனித்தொகுதி), ஆகிய 2 தொகுதிகளில் நான் போட்டியிடுகிறேன். மேலும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவிக்கிறேன்.

ஸ்ரீவைகுண்டம்- சாந்திதேவி, போடி நாயக்கனூர்- முகமது ஷாபி, உடுமலைப்பேட்டை- கண்ணன், ராஜபாளையம்- கருப்பசாமி, சூளூர்- அலெக்ஸ் பாண்டியன், சிங்காநல்லூர்- கலைச்செல்வி, அருப்புக்கோட்டை- கலைச்செல்வன், பெரியகுளம்- நல்லுசாமி, பரமக்குடி- சந்தோஷ்குமார், சங்கரன்கோவில்- ராஜேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர்- கண்ணன், துறையூர்- பி.சம்பத்குமார், அவினாசி- ரங்கசாமி, சோழவந்தான்- ஏ.ஜவகர். இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.

Posted in General | Leave a comment

ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி

அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறோம். நிலக்கோட்டையில் மாவட்ட தலைவர் ஆ.ராமசாமி போட்டியிடுவார். ஒட்டப்பிடாரத்தில் நான் போட்டியிடுகிறேன். நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன். தொடர்ந்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன். கூட்டணி கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்வது குறித்து கூட்டணி தலைமை தான் அறிவிக்க வேண்டும். எங்கள் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றியை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Posted in General | Leave a comment

மதுரையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை: உயர் நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ்

மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் வீரன் சுந்தரலிங்கம் சிலை அமைக்க, என்.ஓ.சி., வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர் வீரன் சுந்தரலிங்கம். ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டத்தில், கொல்லப்பட்டார். வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாள், அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும், கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கத்துக்கு, மதுரையில் சிலை வைக்க கோரி கலெக்டரிம் மனு கொடுத்தோம். மதுரை மாவட்ட நீதிமன்றம் மற்றும் எம்.ஜி.ஆர்., சிலைக்கு நடுவில் உள்ள, ரவுண்டானாவில் சிலை அமைக்க இடம் தேர்வு செய்தோம். இதற்கு மாநகர போலீஸ் கமிசனர் என்.ஓ.சி., வழங்கினால், சிலை அமைக்க ஒப்புதல் வழங்குவதாக, கலெக்டர் தெரிவித்தார். எங்கள் சங்கத்தின் கோரிக்கையை மதுரை போலீஸ் கமிசனர் நிராகரித்துள்ளார். எனவே, சிலை அமைப்பது தொடர்பாக என்.ஓ.சி., வழங்குமாறு, மதுரை போலீஸ் கமிசனருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். மனுவுக்கு பதிலளிக்கும் படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தவிட்டுள்ளார்.

Posted in General | 3 Comments

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண கச்சத்தீவை மீட்க வேண்டும்: ஜான்பாண்டியன்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்பட்ட அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு மதுரை, விரகனூர் ரிங் ரோட்டில் நடந்தது. மதுரை மாவட்ட செயலாளர் சரவணபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பிரிசில்லா பாண்டியன் வரவேற்று பேசினார். மாநாட்டில் இந்திய பவுத்தசபை தேசிய செயலாளர் புத்தபிக்கு டி.சுமேதா, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி பேராசிரியர் பிரபா.கல்விமணி, தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் கண்ணையன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். பின்னர் கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மாநாடு குறித்து விளக்கி பேசினார்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஜனார்த்தனன் தலைமையிலான கமிசன் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

தேவேந்திர குலத்தினரை ஆதிதிராவிடர்கள் என்று கூறாமல் பட்டியலின மக்கள் என்று அழைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு தேவேந்திர குல மக்கள்தான் அதிக அளவில் நிலத்தினை வழங்கியுள்ளனர். எனவே விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை சூட்டுவதுடன், அவரது நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

பட்டியலின மக்களுக்கு அனைத்து நிலை பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் தனியார் துறையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஐந்தாண்டு திட்டத்தில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இதனை இந்த மாநாடு கண்டிக்கிறது.

இந்தியா-இலங்கை இடையிலான சர்வதேச எல்லைக்கோடு பிரச்சினை காரணமாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலும் கச்சத்தீவினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.

சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மாத வருமானத்தை உறுதி செய்வதற்காக ஒரு ஆய்வு கமிசனை அமைக்க வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 ஓய்வூதியம் வழங்குவதுடன், விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

பட்டியல் இன மக்களின் 18 சதவீத இடஒதுக்கீட்டினை இன்றைய மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

இயற்கை வளங்களை பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். விவசாயிகளின் துன்பத்தை போக்கும் வகையில் நதிநீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக தொண்டர்களின் பேரணி நடந்தது. பேரணியை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பார்வையிட்டார்.

Posted in General | 6 Comments

அ.தி.மு.க. 2 சீட் ஒதுக்கியதற்கு புதிய தமிழகம் அதிருப்தி

அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் சீட் ஒதுக்கீடு குறித்து மீண்டும் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

Posted in General | 4 Comments

கருணாநிதி தொடர்ந்து பதவியில் நீடிப்பது முறையற்றது: டாக்டர் கிருஷ்ணசாமி

கருணாநிதி தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பது முறையற்றது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஸ்வான் நிறுவனம் முறைகேடாக அனுமதி பெற்றது. இது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.பி ரியாலிட்டியின் துணை நிறுவனமாகும். ஆ.ராசா மூலம் பெற்ற இந்த சலுகைக்காக இந் நிறுவனம் முதலமைச்சர் குடும்பத்திற்கு பெரிய தொகையை அளித்துள்ளது என்பதே பிரதான குற்றச்சாற்று. அதை நிரூபிக்க கூடிய வகையில் டி.பி ரியாலிட்டியின் துணை நிறுவனங்களான குசேக்கான், சினியூக் வழியாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி கைமாறியுள்ளது. இது கலைஞர் தொலைக்காட்சி, மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் ஆவணங்களிலும் உள்ளது. கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி அளித்ததற்காகவே டி.பி ரியாலிட்டி நிறுவன அதிபர் பல்வா கைது செய்யப்பட்டுள்ளார். இது முழுக்க முழுக்க முதலமைச்சரின் குடும்ப தொலைக்காட்சி. இதில் 80 சதவீத பங்கு முதலமைச்சரின் மனைவி தயாளு அம்மாளுக்கும், மகள் கனிமொழிக்கு 20 சதவித பங்கும் உண்டு. 2ஜி ஸ்பெக்ட்ரத்தின் ஊழல் பணமே கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய புலனாய்வு கழகத்தினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது முதலமைச்சர் நாற்காலிக்கு அவமானம். எந்த நேரத்திலும் அவர் குடும்பத்தார் கைது செய்யப்படலாம். இந்த நிலையில் முதலமைச்சர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது முறையற்றது. எனவே அவர் பதவியிலிருந்து விலகி அவரும் அவரது குடும்பத்தாரும் முறையாக விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Posted in General | 1 Comment

புதிய தமிழகம் போட்டியிடும் சின்னம் குறித்து 19-ந் தேதி முடிவு

வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் இன்று வரை, புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது?, அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுவதா? அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுவதா?, வேட்பாளர்கள் யார்? என்பதை முடிவு செய்ய வருகின்ற 19-ந் தேதி (சனிக்கிழமை) மாவட்ட பொறுப்பாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மீனவர்களின் அவலம் குறித்து, தி.மு.க. சார்பில் இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தது வேடிக்கையாக இருக்கிறது. 2004-ம் ஆண்டில் இருந்து 7-வது ஆண்டாக மத்திய ஆட்சியில் பங்கு வகிக்கும் தி.மு.க., இவர்கள் வேறு, அரசு அதிகாரம் வேறு என்பது போல் போராட்டம் நடத்துகிறார்கள். இது, தமிழர்களையும், மீனவர்களையும் ஏமாற்றும் வேலை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வி.கே.அய்யர், சென்னை மாவட்ட செயலாளர் ராஜேந்திர பிரசாத், துறைமுக தொழிற்சங்க செயலாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Posted in General | 1 Comment

மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்!

மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மக்கள் தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் நேற்று முன்தினம்( 09-02-11) மக்கள் தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் அரசியல் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* தியாகி இமானுவேல்சேகரனுக்கு மணிமண்டபம் அமைத்தி, அரசு விழா எடுப்பதுடன், தபால் தலை வெளியிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்.

* தேவேந்திர குல மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

* சென்னை மெரீனா கடற்கரையில் வீரன் சுந்தரலிங்கம் உருவச்சிலையை நிறுவ வேண்டும்.

* மறைந்த மூதறிஞர் தேவ ஆசீர்வாதத்தின் நூல்களை நாட்டுடமையாக்கி தஞ்சையில் அவர் வாழ்ந்த வீட்டை மணிமண்டபமாக மாற்ற வேண்டும்.

* தமிழக மக்களின் சம்மதமின்றி இந்திய அரசால் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பன்னாட்டு முதலாளிகளுக்கு தமிழகத்தின் நீண்ட கடற்கரையைத் தாரை வார்க்க வழிவகுக்கும் இந்திய கடற்கரை மேலாண்மைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் அ.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாநில செய்தித்தொடர்பாளர் டென்னீஸ், மாவட்ட இளைஞரணிச் செயலர் சி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவர் குழ.செல்லையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கட்சியின் நிறுவனத்தலைவர் வழக்குரைஞர் புரட்சிக்கவிதாசன் மாநாட்டு பேருரையாற்றினார்.

முன்னதாக நடைபெற்ற பேரணியை மாநில இளைஞரணிச் செயலர் திருச்சி ஆர்.பெரியசாமி தொடக்கிவைத்தார். இதையடுத்து நடைபெற்ற கருத்தரங்கில், அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் குருசாமிசித்தர் பாராட்டப்பட்டார். முன்னதாக, மாவட்ட இணைச் செயலர் சி. ரவி வரவேற்றார். தொழிலதிபர் எஸ்.கே.ரவி நன்றி கூறினார்.

Posted in General | 3 Comments

இமானுவேல் சேகரனாரின் தபால்தலை வெளியீட்டை மறைத்த கருணாநிதியின் கூட்டம்!

நினைவுத் தபால்தலை அல்லது ஞாபகார்த்த தபால்தலை(Commemorative stamp) என்பது ஏதாவதொரு இடத்தை நிகழ்வை அல்லது ஒரு நபரை கௌரவிப்பதற்காக வெளியிடப்படும் தபால்தலை ஆகும். உலகின் பெரும்பாலான தபால் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான பல ஞாபகார்த்த தபால்தலைகளை வெளியிடுகின்றன. இவ்வாறான தபால் தலைகளின் முதல் நாள் வெளியீடு, கௌரவிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடைய இடங்களில் ஒரு சிறிய விழாவாகவும் நடைபெறுவதுண்டு. இந்த முதல் நாள் வெளியீட்டின் போது இதற்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கடித உறையில் இத் தபால்தலை ஒட்டப்பட்டு குறிப்பிட்ட நாளுக்குரிய நாள் முத்திரையும் பதிக்கப்பட்டு முதல்நாள் உறையாக FDC- First Day Cover விற்கப்படும்.

இதைப்போல் தான் இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபின் 2200க்கும் மேற்பட்ட ஞாபகார்த்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு தபால்தலை வெளியிடப்படும்போதும், குறிப்பாக தியாகிகளுடைய அல்லது தலைவர்களுடைய தபால் தலை வெளியிடும் போது, அவர்களுடைய சம்பந்தப்பட்ட ஊரிலோ அல்லது மாநிலத்திலோ, அவர்களின் பிறந்த நாளிலோ அல்லது நினைவு நாளிலோ பெரிய விழா எடுத்து மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்கள் முன்னிலையிலேயே இந்த தபால் தலை வெளியிடப்படும். அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது தியாகிகளின் குடும்பத்தினரை அழைத்து கௌரவிப்பார்கள். ஆனால் ஒன்றரை கோடி தேவேந்திரர்களின் மதிப்புமிக்க தலைவராக கருதப்படும் தியாகி இமானுவேல் சேகரனார் தபால் தலையை மேலே சொன்ன எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் நேரடியாக விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தியாகி இமானுவேல் சேகரனாருக்கு செய்த மிகபெரிய அவமரியாதை.

தற்போது முன்னெப்போதுமில்லாத அதிகளவு மத்திய அமைச்சர்களை கொண்டிருக்கிற திமுக மற்றும் காங்கிரசின் தேவேந்திரர் விரோத போக்கையே இது காட்டுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொள்ள முயலும் காங்கிரசும் இந்த கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

இதைவிட கொடுமை பல்லாயிரக் கணக்கான தபால் தலைகளை வெளியிட்ட நாள், அந்த தபால் தலையின் புகைப்படம், அதன் விவரம்(Broucher) இவை மூன்றையும் ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி வைத்திருக்கின்ற http://www.indiapost.gov.in/ என்ற அரசு தபால்துறை இணையதளத்தில் கூட இந்த தபால்தலை வெளியிடப்பட்ட செய்தியை மறைத்திருக்கிறார்கள். ஆனால் http://stampsofindia.com/ போன்ற தபால்தலை சேகரிப்பாளர் சேவை இணையதளங்களில் இதைப்பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு FDC என்று சொல்லப்படுகின்ற முதல்நாள் உறை, அதாவது தபால் துறையே தியாகி இமானுவேல் சேகரனார் படம் போட்ட ஒரு தபால் உறையில், இமானுவேல் தபால் தலை ஒட்டி, அதிலே அரசு தபால் நிலைய முத்திரையும் இட்டு விற்பனை செய்துள்ளனர். அந்த கவர் படங்கள் கூட தனியார் இணையதளங்களில் உள்ளது.

மற்றும் ஒவ்வொரு தபால் தலை வெளியிடப்படும் பொழுதும் அதன் இணைப்பாக ரூபாய் 2க்கு வெளியிடப்படும் பிரௌச்சர் என்று சொல்லக்கூடிய அந்த தபால்தலையைப் பற்றிய விளக்க கையேடும் நேரடியாக விற்பனைக்கு வந்துள்ளது. இதனுடைய புகைப்படமும் தனியார் இணையதளங்களில் காணக் கிடைக்கின்றன.

அப்படியானால் திட்டமிட்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்கு வெளியிடப்பட்ட தபால் தலையை மறைத்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர் யார்?

இந்த தபால் தலை வெளியிடப்பட்ட போது, அத்துறையின் அமைச்சர் கலைஞர் பாணியில் சொன்னால் ஒரு தலித். ஆனால் அவரும் சேர்ந்து கலைஞரின் ஆலோசனைப்படி, ப.சிதம்பரத்தின் வேண்டுகோளின்படி மற்றும் ஆதிக்க சாதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வேண்டுகோளின் படி, திருமாவளவனின் வேண்டுகோளின்படியும் இந்த சதித்திட்டம் நிறைவேறியுள்ளது. தேவேந்திரர்களின் வரலாறுகளை தொடர்ந்து மறுத்து வரும் கலைஞரும் அவரது கூட்டமும் மீண்டும் ஒரு வரலாற்று தவறு செய்திருக்கிறது.

இமானுவேல் சேகரனாரின் தபால் தலை வெளியிடப்பட வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் தேவேந்திரர்கள் கலைஞருக்கு எதிராக ஒன்றுதிரண்டார்கள் என்ற காரணத்திற்காகவே இது நடந்திருக்கக் கூடும்.

1. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைத்தது.

2. உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களை அநியாயமாக பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தேவேந்திரர்கள் ஒன்று திரண்டு போராடியது

3. மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டவேண்டும் என்று பெரிய அளவில் போராட்டங்கள் எழுந்தது போன்ற காரணங்களை வைத்து எப்படியும் தேவேந்திரர்கள், வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் தமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைத்தே கலைஞர் இந்த தேவேந்திரர் விரோதச் செயலலை செய்திருக்கிறார்.

துரோகத்தின் விளைநிலம் கருணாநிதிக்கும், துணை நின்ற காங்கிரசுக்கும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேவேந்திரர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு இதைவிட மிகப்பெரிய காரணம் தேவையில்லை. சிந்திப்பீர் தேவேந்திரர்களே!…

Posted in General | 9 Comments